தமிழ்நாடு

விஜயேந்திரர் சர்ச்சை: வைரமுத்து கருத்து

Rasus

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காத விவகாரத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவும் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்கவில்லை. ஆனால், தேசியகீதம் இசைக்கும் போதும் மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார். விஜயேந்திரரின் இந்தச் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவும் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ தேசிய கீதம் என்பது தாய்நாட்டை மதிப்பது. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை மதிப்பது. இரண்டும் சம அளவில் மதிக்கப்படவேண்டியவை” என தெரிவித்துள்ளார்.

ஆண்டாள் குறித்து வைரமுத்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கூறி தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக அவருக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.