வழக்கினால் ஊடகத்தை ஒடுக்கிவிட என முடியாது என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற வட்டமேசை விவாத நிகழ்ச்சி தொடர்பாக கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புதிய தலைமுறை நிர்வாகம், அதன் செய்தியாளர், நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தலைமுறை மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் சங்கம் தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய தலைமுறை மீதான வழக்கை திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கினால் ஊடகத்தை ஒடுக்கிவிட என முடியாது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “ புதிய தலைமுறை மீது வழக்கு என்பது கருத்துரிமை வழங்கிய இந்திய அரசமைப்புக்கே எதிரானதாகும். வழக்கினால் ஊடகத்தை ஒடுக்கிவிட முடியாது. உரியவர்கள் சிந்திக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.