தமிழ்நாடு

“கருணாநிதியோடு ஸ்டாலினை ஒப்பிடாதீர்கள்.. அந்த ரோஜா வேறு; இந்த ரோஜா வேறு” - வைரமுத்து

“கருணாநிதியோடு ஸ்டாலினை ஒப்பிடாதீர்கள்.. அந்த ரோஜா வேறு; இந்த ரோஜா வேறு” - வைரமுத்து

webteam

கருணாநிதியோடு ஸ்டாலினை ஒப்பிடாதீர்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா புகழரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எம்.பி ஜெகத்ரட்சகன், கவிஞர் வைரமுத்து, இலங்கை எம்.பி ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து “திராவிட இயக்கத்தை கட்டிக்காக்க திராவிட சித்தாந்தத்தை பரப்ப ஆள் வேண்டும். இதனை தொடர்ச்சியாக செய்ய காலம் ஸ்டாலினை அனுப்பி உள்ளது. கருணாநிதிக்கு பிறகு கட்சி சிதறும் என்றார்கள். ஆனால் உடையவில்லை. சிதறவில்லை. முணுமுணுப்பு இல்லை. கருணாநிதி உடன் ஸ்டாலினை ஒப்பிடவே ஒப்பிடாதீர்கள். யாரையும் யாருடனும் ஒப்பிடாதீர்கள்.

ரோஜாவோடு ரோஜாவை ஒப்பிடாதீர்கள். அந்த ரோஜா வேறு. இந்த ரோஜா வேறு. கருணாநிதி வேறு உயரம். ஸ்டாலின் வேறு உயரம். இரண்டும் வெவ்வேறு சிகரம். கருணாநிதிக்கு ஆரியம், டெல்லி மட்டும்தான் பிரதான எதிரிகள். ஆனால் தற்போது தமிழகம் துண்டாடப்பட்டுள்ளது. ஜாதியால், மதத்தால் கட்சிகளால், கூட்டாண்மை (கார்ப்பரேட்) நிறுவனங்களால் துண்டாடப்பட்டுள்ளது. இது கண்ணுக்கு தெரியாது.

தமிழக அரசியலில் கருணாநிதி குடும்பத்தைபோல அதிகம் துன்புற்ற குடும்பம் எதுவும் இல்லை என நான் கருதுகிறேன். கருணாநிதி சொல்லிவிட்டு செய்து முடிப்பார். ஸ்டாலின் செய்து முடித்து விட்டு சொல்லிக் கொடுப்பார். கருணாநிதி மறப்பார், மன்னிப்பார். ஆனால் ஸ்டாலின் மன்னிப்பார், மறக்கமாட்டார். திமுகவிற்கு கூட்டணி முக்கியம் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அதை முடிவெடுக்க வேண்டிய நிலையில் கட்சி உள்ளது. எந்த கட்சிகளோடு கூட்டணி என்பதை ஸ்டாலின் முடிவு செய்வார். ஆனால் திமுக திமுகவோடு கூட்டணி வைத்துள்ளதை தொண்டர்கள் உறுதிப்படுத்தினால் ஸ்டாலின் தான் மகுடம் சூடுவார்” எனப் பேசினார்.