வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான, சொர்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனம் உருகி சாமி தரிசனம் செய்தனர்.
108 வைணத்திருத்தங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பகல்பத்து, ராப்பத்து என 20 நாட்கள் இப்பெருவிழா நடைபெறும். இராப்பத்து திருவிழாவின் தொடக்க நாளான இன்று அதிகாலை 5.00 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிகாலை 3.45 மணிக்கு ரத்தின அங்கி சேவையோடு, கிளி மாலை அணிந்து ரங்கநாதர் பக்தர்களிடையே கொண்டுவரப்பட்டு, சொர்கவாசலைக் கடந்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசமாக கோஷம் எழுப்பினர். பின்னர், ஆயிரங்கால் மண்டபத்தில் காட்சியளித்த ரங்கநாதரை, பொதுமக்கள் தரிசனம் செய்தனர். சொர்கவாசல் திறப்பையொட்டி, ஸ்ரீரங்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதேபோல, சென்னை திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோவில் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.