தமிழ்நாடு

ஸ்ரீரங்கம்: கோலாகலமாக தொடங்கிய வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவ காட்சிகள்!

webteam

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகுவிமரிசையாக இன்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து, ராப்பத்து என 20 நாட்கள் நடைபெறும். இதில் பகல்பத்து உற்சவம் இன்று (23.12.2022) காலை தொடங்கியது. பகல்பத்து முதல் நாளான இன்று நம்பெருமாள் (உற்சவர்) மூலஸ்தானத்திலிருந்து காலை 5.30 மணிக்கு புறப்பாடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்து அர்ஜுன மண்டபத்தில் நாள் முழுவதும் வீற்றிருப்பார்.

இரவு அர்ஜுன மண்டபத்தில் இருந்து புறப்பாடு செய்யப்பட்டு மீண்டும் மூலஸ்தானம் சென்றடைவார். பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை  தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமப்பது வாசல் திறப்பு ஜனவரி மாதம் (02.01.2023) இரண்டாம் தேதி நடைபெறுகிறது.

அதற்கு முன்னதாக 01.01.2023 அன்று நம்பெருமான் நாச்சியார் திருக்கோலத்தில்  புறப்பாடும் நடைபெறும். வருகிற ஜனவரி 12ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இனிதே நிறைவடைகிறது.