மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25-ஆம் தேதி பதவியேற்கிறார்.
தமிழகத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கு ஜூலை 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இப்பதவிகளுக்கு திமுக சார்பில் வில்சன், சண்முகம், திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக சார்பில் முஹம்மத் கான், சந்திரசேகர், அதிமுக ஆதரவுடன் பாமகவின் அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வைகோவின் வேட்புமனு ஏற்கப்படுமா என்ற சந்தேகம் இருந்ததால் திமுகவின் இளங்கோவும் வேட்பனுத் தாக்கல் செய்திருந்தார். இதனிடையே வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்ட காரணத்தினால், திமுகவின் இளங்கோ தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனையடுத்து 6 பதவிகளுக்கு 6 பேர் தான் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்ததால், மனுத் தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வாகினர்.
இந்நிலையில் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25-ஆம் தேதி பதவியேற்கிறார். அன்றைய தினமே திமுக உறுப்பினர்களான சண்முகம், வில்சன் ஆகியோரும் பதவி ஏற்கின்றனர்.