வைகோ vs பிரதமர் மோடி
வைகோ vs பிரதமர் மோடி  PT WEB
தமிழ்நாடு

"இந்தியாவின் முதல் எதிரி பிரதமர் மோடி தான்..என் மீது வழக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்" - வைகோ ஆவேசம்!

webteam

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை ஓபுளா படித்துறை பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், " இந்திய வரலாற்றை இது முக்கியமான தேர்தல். இந்தியாவில் சர்வாதிகாரம் தொடர வேண்டுமா? பாசிசம் தொடர வேண்டுமா?, ஜனநாயகம் மலர வேண்டுமா? என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல்.

இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்குப் பிரதமராக இருக்கும் மோடி, தமிழகத்தைப் பிரிந்து பார்க்கிறார். புயல், வெள்ளத்தில் தமிழகம் பாதிக்கப்பட்டபோது கண்ணீரும் கம்பலையுமாக இருந்த மக்களுக்கு ஆறுதல் சொல்ல வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தலுக்காகத் தமிழகத்திற்கு 8 முறை வந்துவிட்டார். தேர்தலுக்காக அடிக்கடி வந்து செல்கிறார். இது கேள்வி கேட்போர் இல்லாத நாடு என்று மோடி நினைத்து விட்டார். ஆனால், நாங்கள் கேள்வி கேட்போம்.

திராவிட இயக்கங்களை ஒழித்துவிடுவேன் என்று மோடி பேசி வருகிறார். திராவிட இயக்கங்களை அழிக்க நினைத்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள். இவற்றை எல்லாம் மோடி யோசித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் இந்துக்கள் மட்டும்தான் வாழ வேண்டும். முஸ்லீம்களுக்கு வாக்குரிமை கிடையாது. அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என பா.ஜகவினர் நினைக்கின்றனர். சிறுபான்மையின மக்களுக்கு எதிராக அவர் செயல்படுகிறார்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை மாற்றிவிட்டு குடியரசுத்தலைவர் ஜனநாயகத்தைக் கொண்டுவர நினைக்கிறார். அமெரிக்கா, ரஷ்யாவில் இருப்பதுபோல், இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டுவர நினைக்கிறார். தான் ஜனாதிபதியாகவும் மாற நினைக்கிறார். "இந்தியாவின் முதல் எதிரி பிரதமர் மோடி என்று நான் பகிரங்கமாகச் சொல்கிறேன். இதற்காக என் மீது வழக்கு வேண்டும் என்றால் போட்டுக்கொள்ளுங்கள்" என்றார்.