தமிழ்நாடு

மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தார் வைகோ

மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தார் வைகோ

Rasus

தேசத் துரோக வழக்கில் வைகோவிற்கு விதிக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவைத் தேர்தலுக்கு இன்று அவர் தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல், வருகிற 18-ஆம் தேதி நடைபெறுகிறது.  இத்தேர்தலில் திமுக சார்பில் தொமுச-வைச் சேர்ந்த சண்முகமும், வழக்கறிஞர் வில்சனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணிக் கட்சியான மதிமுகவுக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டது.

வைகோ மீதான தேசத்துரோக வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம் வைகோவிற்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. பின்னர் சிறிது நேரத்தில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் வைகோ மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட தடை ஏதும் இல்லை என்பதால், இன்று அவர் மாநிலங்களவைத் தேர்தலுக்கான தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார்.

தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வைகோ தனது வேட்புமனுவை அளித்தார். இதேபோல திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் ஆகியோரும் தங்களது வேட்புமனுவினை தாக்கல் செய்தனர். வேட்புமனுத் தாக்கலின்போது திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.