தமிழ்நாடு

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மே நாள் விடுமுறை ரத்து - வைகோ கண்டனம்

webteam

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மே நாள் விடுமுறையை ரத்து செய்து இருப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகம் முழுவதும் மே முதல் நாள், தொழிலாளர்கள் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அண்ணா 1967 ஆம் ஆண்டு முதல்வர் பொறுப்பு ஏற்றபோது மே 1ஆம் தேதியன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்து பெருமை சேர்த்தார். அதன் பிறகு வந்த கருணாநிதியும் அதை தொடர்வதாக உத்தரவிட்டார்.

தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு மே நாளுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார் அப்போதைய இந்திய பிரதமர் வி.பி.சிங். ஆனால் இப்போதைய பாஜக அரசு தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து வருகிறது. ரயில்வே துறையில் தொழிலாளர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோய் கொண்டிருக்கின்றன. இதுவரை மே நாளுக்கு அளிக்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய விடுமுறையை ரத்து செய்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது கண்டனத்திற்குரியது. 2021 விடுமுறை நாள் பட்டியலில் மே நாளுக்கு பொது விடுமுறை நாள் உண்டு என பொன்மலை ரயில்வே பணிமனை நிர்வாகம் அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.