2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, தனிச்சின்னம் வழங்காத விவகாரத்தால் ஏற்பட்ட உரசலுக்கு மத்தியில் கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜூன் 27 பொதுக்குழு கூட்டத்தில் அரசியல் நிலைப்பாடு தீர்மானிக்கப்படும் நிலையில், திமுகவினர் சமூக வலைதளங்களில் மதிமுக மீது அவதூறு பரப்புவதாக வைகோ குற்றம்சாட்டுகிறார்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக அனைத்து இடங்களிலும் கூட்டணி கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட்டது. தொகுதி ஒதுக்கீடின்போதே தனிச்சின்னம் ஒதுக்கப்படாததில் மதிமுக, திமுக இடையே உரசல் இருந்ததாக சொல்லப்பட்டது. முதலில் தனிச்சின்னத்திற்கு 1 தொகுதிக்கு திமுக ஒப்புக்கொண்டாலும், பின்னர் அதற்கும் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனிச்சின்னத்தில் போட்டியிடாதது குறித்து கட்சிக்குள் அதிருப்தி இருந்துவருவதாக சொல்லப்படும் நிலையில், திமுக-மதிமுக கூட்டணி தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது வரை திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம் என்று தெரிவித்த துரை வைகோ, ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிஷ்டவசம் என துரை வைகோ பேசியதும், தவெகவிற்கு சாதகமான கருத்துகளை வைகோ பேசியதும் திமுக-மதிமுக கூட்டணி நிலைக்குமா என்ற குழப்பத்தை ஏற்படுத்திவருகிறது.
இந்நிலையில் திமுக குறித்து பேசியிருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசின் கடந்த ஒரு மாத கால ஆட்சி ‘அருமையாக உள்ளது’ என ஒரே வார்த்தையில் கூறிவிடலாம். சேலம் பாலியல் விவகாரம் போன்ற கொடூரங்கள் திமுக, அதிமுக என அனைத்து ஆட்சிக் காலங்களிலுமே நடந்து வருகின்றன. இதற்கும் ஆட்சிக்கும் சம்பந்தமில்லை. இது போன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகளை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைப்பதற்கான தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்; அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும், பாலியல் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஜாமீன் உள்ளிட்ட எந்தவொரு சலுகையையும் வழங்கக் கூடாது. இத்தகைய கடுமையான தண்டனைகள் மூலமாகவே பாலியல் குற்றங்களைக் குறைக்க முடியும். பாலியல் குற்றங்களுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
வருகிற 27-ஆம் தேதி மதிமுக பொதுக்குழு கூடவுள்ளது. அப்போது தற்போதைய அரசியல் சூழலை ஆராய்ந்து, அதன் பின்னர் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்போம். நாங்கள் திமுகவைப் பற்றி எந்தவொரு தவறான கருத்தையும் பேசவில்லை. ஆனால், அவர்கள் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் எங்களைப் பற்றி அவதூறாகப் பேசி வருகிறார்கள்” என பேசியுள்ளார்.