ஹைட்ரோ கார்பன் எடுக்க தடைவிதிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அடக்குமுறைகள் மூலம் நசுக்கி விடலாம் என தமிழக அரசு நினைத்தால், அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அங்கு ஷேல், ஹைட்ரோ கார்பன் எடுக்கத் தடைவிதிக்கக்கோரி வடகாடு நெடுவாசல் விவசாய சங்கம் சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று நீதியரசர் எம்.எஸ்.நம்பியார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாதாடினார்.
அப்போது, தமிழக அரசு சார்பில் பதிலளிக்க கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி, வழக்கை வரும் ஜனவரி 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஹைட்ரோ கார்பன் எடுக்க தடைவிதிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அடக்குமுறைகள் மூலம் நசுக்கி விடலாம் என தமிழக அரசு நினைத்தால் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறினார்.