தமிழ்நாடு

ஆம், விடுதலைப்புலிகளை ஆதரித்துதான் பேசினேன் : நீதிமன்றத்தில் வைகோ

ஆம், விடுதலைப்புலிகளை ஆதரித்துதான் பேசினேன் : நீதிமன்றத்தில் வைகோ

webteam

விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக தேச துரோக வழக்கு விசாரணையில் மதிமுக பொதுச்செயலாளார் வைகோ தெரிவித்துள்ளார். 

சென்னை ராணி சீதை மன்றத்தில் 2009ஆம் ஆண்டு ‘நான் குற்றம்சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியிட்டு விழா நடந்தது. இந்த விழாவில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ பங்கேற்றார். இந்த விழாவில் வைகோ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. 

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு நேரில் ஆஜரான வைகோ நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், “நான் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசினேன். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசே காரணம். இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஒரு சர்வதேச போர் குற்றவாளி. 

நான் இந்திய அரசு மீது வெறுப்புணர்வையோ, காழ்ப்புணர்வையோ ஏற்படுத்தும் விதமாக பேசவில்லை. இந்திய அரசு தனது கொள்கையை தான் மாற்றவேண்டும் என்று கூறினேன். அத்துடன் கடந்த 2002ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவையில் விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன் இன்றும் ஆதரிக்கிறேன்,நாளையும் ஆதரிப்பேன் என்று பேசியதை சுட்டிகாட்டி ஒரு பொதுக்கூட்டத்தில் நான் பேசினேன். அதற்கு என் மீது பொடா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டேன். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரித்து பேசுவது குற்றமாகாது என்று தீர்ப்பளித்தது” எனக் கூறினார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை 19ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

இந்த விசாரணையை தொடர்ந்து நீதிமன்றத்தில் வெளியே வந்த வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துதான் காணப்படுகிறது. இதனால் ஓட்டல்கள் ஐடி நிறுவனங்கள் மூடப்படவில்லை என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தது ஒரு போய். மழை பெய்த போது தண்ணீரை சேமித்து வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தடுப்பணைகள் கட்டவில்லை,ஏரி குளங்கள் தூர்வாரவில்லை. வெறும் பெயரளவில் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்ல மட்டும்தான் செய்கிறார்கள். ஆனால் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை” எனத் தெரிவித்தார்.