தமிழ்நாடு

தீ விபத்துக்கு காரணம் என்ன? மின் வாரியம் விளக்கம்

தீ விபத்துக்கு காரணம் என்ன? மின் வாரியம் விளக்கம்

webteam

சென்னை வடபழனியில் உள்ள நான்கு பேரை பலிகொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் தீ விபத்துக்கு மின் ஒயர் கோளாறே காரணம் என மின்சார வாரியம் கூறியுள்ளது.

சென்னை வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் 20 இரு சக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். முதல்தளத்தில் வசித்தவர்கள் அனைவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து விட்டு, அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கதில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சஞ்சய் (வயது 3), சந்தியா (10) மீனாட்சி (60), செல்வி (35) ஆகியோர் பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்த 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மின் வயரில் ஏற்பட்ட கோளாறே இந்த தீவிபத்துக்குக் காரணம் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.