சென்னை வடபழனி போக்குவரத்து பணிமனை விபத்தால் இளம் மனைவி ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வடபழனியில் போக்குவரத்து பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்தப் பணிமனையில் நேற்றிரவு வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டது. அதாவது சோதனை செய்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று, அருகிலிருந்த சுவரின் மீது மோதியது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், இடிபாடுகளில் சிக்கிய 8 ஊழியர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சேகர், பாரதி ஆகிய 2 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் சோகம் என்னவென்றால், உயிரிழந்த பாரதிக்கு 1 மாதத்திற்கு முன்தான் திருமணம் நடந்து முடிந்திருந்தது.
கடந்த 4 ஆம் தேதிதான் நாகேஸ்வரிக்கும், மாநகரப் போக்குவரத்துக்கழக ஊழியரான பாரதிக்கும் திருமணம் நடந்தது. இவர்களின் வாழ்க்கை தொடங்கும் முன்பே பணிமனையில் நேரிட்ட விபத்தால் முடிந்துவிட்டது. இதுகுறித்து நாகேஸ்வரி, “திருமணத்திற்குப் பிறகு விடுமுறை கூட கிடைக்காமல் மூன்றே நாளில் பணிக்குத் திரும்பிய கணவரை இப்படி பார்க்கும் நிலை வந்ததே” என்று கதறினார்.
மேலும் பாரதியின் தங்கை பச்சையம்மாள், “விபத்துக்குப் பிறகு அளிக்கப்படும் இழப்பீடுகளும், ஆறுதல் வார்த்தைகளும், பறிபோன உயிரை மீட்டுத்தரப் போவதில்லை” எனக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.