திங்கள்கிழமை முதல் மீனாட்சியம்மன் கோவிலில் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் நியாய விலை கடை, வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், திரையரங்கம், திருமண மண்டபம், கடைவீதிகள், துணிக்கடைகள், வங்கிகள், சந்தைகள், மதுபான கடைகள் உள்ளிட்ட பொது இடங்களில் நாளை முதல் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை மருத்துவத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை உள்ளிட்ட 6 துறையினர் அரசின் சார்பில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வர் எனவும் ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் 3-வது அலை தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக உலக பிரசத்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருக்கோயிலின் நான்கு கோபுர வாசல்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழோ, குறுஞ்செய்தியோ, கோவின் இணையதளத்திலோ, வாட்ஸ்அப்பிலோ பதவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ் என ஏதாவது ஒரு ஆவணம் காண்பித்தால் மட்டுமே கண்டிப்பாக திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி இல்லாத 18வயதிற்கு குறைவான சிறுவர்கள், குழந்தைகளை அனுமதிப்பது குறித்தும் தற்போது ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.