தமிழ்நாடு

உத்தமபாளையம்: அதிமுக ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு எதிராக கைகோர்த்த திமுக-அதிமுக உறுப்பினர்கள்

webteam

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அதிமுக கவுன்சிலர்கள் சிலர், திமுக கவுன்சிலர்களுடன் இணைந்து அதிமுக பிரமுகராக இருக்கும் ஊராட்சி ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்திருந்தனர். அவர்கள் எதிர்பாரா விதமாக, அந்த ஊராட்சி ஒன்றிய தலைவர் இன்று தனது தலைவர் பதிவியை அவரே ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை அவர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகள் உள்ளன. இந்த பதவியிடங்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதில் 7 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. இரண்டு இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் அமமுகவும் வெற்றி பெற்றன. இதையடுத்து அதிக பெரும்பான்மையுடன் அதிமுக-வை சேர்ந்த ஜான்சி வாஞ்சிநாதன், ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக மூக்கம்மாள் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆட்சி மாற்றத்திற்கு பின் திமுக உத்தமபாளையம் ஒன்றிய செயலாளரான அணைப்பட்டி முருகேசன் தலைவராக முயற்சி செய்தார். இதனால், அதிமுக ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்களுடன் இணைந்து அதிமுக ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. மேலும் ஒரே ஒரு அமமுக ஒன்றிய உறுப்பினரும் திமுக -வில் இணைந்தார். இதையடுத்து திமுக., மற்றும் அதிமுக., உறுப்பினர்கள் ஒரே அணியாக செயல்படத் துவங்கினர். அனைவரும் இணைந்து, ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜான்சி வாஞ்சிநாதன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது என முடிவு செய்தனர். இந்நிலையில், ஜான்சி வாஞ்சிநாதன் தனது ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை இன்று காலை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை மாவட்ட ஆட்சியர் கே.வி.முரளிதரனிடம் அவர் வழங்கினார்.

இதனையடுத்து ஜான்சி வாஞ்சிநாதன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து தற்போது உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து உறுப்பினர்களும் ஒரே அணியாக இணைந்துள்ளதால் உத்தமபாளையம் ஊராட்சி ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.