கந்துவட்டி புகார்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கந்துவட்டி கொடுமையால் பாதிப்புக்கு உள்ளான கூலித் தொழிலாளி இசக்கிமுத்து, தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்திலேயே தீக்குளித்தார். தீயில் கருகிய இசக்கிமுத்துவின் இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவி உயிரிழந்த நிலையில் இசக்கிமுத்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இது ஒருபுறம் இருக்க, கந்துவட்டி கடனை செலுத்த சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட விசைத்தறி தொழிலாளி கடைசி நேரத்தில் மீட்கப்பட்டார். இதுமட்டுமில்லாமல் தேனியில் கந்துவட்டி கொடுமையால் பாதிப்பிற்குள்ளான தாயும் மகனும் தற்கொலைக்கு முயன்றனர்.
இந்நிலையில் கந்துவட்டி தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கந்துவட்டியினால் பாதிக்கப்பட்ட மக்கள் எந்த அச்சத்திற்கும் ஆளாகாமல் ஆட்சியர், போலீசாரை அணுகி தங்களது புகாரை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதிக வட்டி வசூல் குறித்த புகார் மனுக்கள் மீது விரைந்து செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர், போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.