கந்து வட்டிக் கொடுமையில் தற்போது மீண்டும் ஒருவர் பலியாகியுள்ளார். கந்து வட்டிக் கொடுமையை ஒழிக்க கடந்த 2003ம் ஆண்டிலேயே தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
2003ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டத்திற்கு அதீத வட்டிவசூல் தடைச்சட்டம் எனப் பெயர். அந்தச் சட்டம் என்ன சொல்கிறது?
- வியாபார நோக்கில் ஆண்டுக்கு 18 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றம்.
- தனி உபயோகத்திற்காக 12 சதவிகிதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றம்
- அதீத வட்டி வசூலிப்பவர்களுக்கு மூன்றாண்டு கடுங்காவல் சிறை, ரூ.30 ஆயிரம் வரை அபராதம்
- வட்டிகாரர்களுக்கு எதிரான புகார்களை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கும் அதிகாரம் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது
- கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவியல் நீதிமன்றங்களை அணுகினால், அதில் தொடர்புடைவர் 15 நாட்களில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்படும்.
- கடன்பெற்றவர், செலுத்த வேண்டிய தொகையை அதற்கான அனுமதிக்கப்பட்ட வட்டியுடன் நீதிமன்றத்தில் செலுத்தினால் போதும்
- வசூலிப்பவர் கடன் பெற்றவரின் அசையும், அசையா சொத்துக்களை கையகப்படுத்தியிருந்தால், அவற்றையும் நீதிமன்றம் மீட்டுக்கொடுக்கும்.
- கடன் அளிக்கும் தொழில் செய்ய விரும்பும் நபர், தாசில்தாரிடம் பதிவு செய்து லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.
- கந்துவட்டி பிரச்னையால் யாராவது தற்கொலை செய்ய நேர்ந்தால், தற்கொலைக்கு தூண்டியதாக வட்டிக்குப் பணம் கொடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
சட்டத்தில் இவ்வளவு கெடுபிடிகள் இருந்தாலும், எந்தக் கெடுபிடிக்கும் அஞ்சாமல் அதீத வட்டியின் கெடுபிடியில் மாட்டி மரணம் அடைந்தவர்கள் பட்டியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தி, கந்துவட்டி கொடுமையால் இனி உயிர்கள் பறிபோகாமல் காக்க வேண்டும் என்ற கோரிக்கையே தற்போது பல தரப்பிலும் முன்வைக்கப்படுகிறது.