தாய் பாண்டியம்மாள் - மகன் சிவசாமி pt desk
தமிழ்நாடு

உசிலம்பட்டி: மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை அடித்துக் கொலை செய்த தாய்

உசிலம்பட்டி அருகே மதுபோதைக்கு அடிமையாகி அடிக்கடி தாயுடன் தகராறில் ஈடுபட்டு வந்த மகனை, தாய் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

webteam

செய்தியாளர்: பிரேம்குமார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த சேகர் - பாண்டியம்மாள் ஆகியோரின் மகன் சிவசாமி. திருமணமாகி விவாகரத்தான இவர், தனது தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மது போதைக்கு அடிமையான இவர், நாள்தோறும் மது போதையில் தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தாகக் கூறப்படுகிறது.

Police station

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை சேகர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், மது அருந்திவிட்டு வந்து தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்படி நேற்றும் வழக்கம் போல மது போதையில் வீட்டிற்கு வந்த சிவசாமி, தாயுடன் தகராறில் ஈடுபட்டதோடு வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி, தாயை தாக்க முற்பட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தாய் பாண்டியம்மாள், மகன் சிவசாமியை கட்டை மற்றும் கல்லால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்து சிவசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த சிந்துபட்டி காவல்நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பாண்டியம்மாளை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.