தமிழ்நாடு

அறநிலையத்துறை நிலத்தை கோயில்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

அறநிலையத்துறை நிலத்தை கோயில்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

நிவேதா ஜெகராஜா

அறநிலையத்துறை நிலத்தை கோயில் பயன்பாடு தவிர பிற தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் வையப்பமலை சுப்பிரமணிசாமி கோயில் புறம்போக்கு நிலத்தை, வகைமாற்றம் செய்து 81 பேருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கியதை எதிர்த்து கோயில் சார்பில் தொடுக்கப்பட்டிருந்த மனுவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு பதிலளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் உள்ள வையப்பமலை சுப்ரமணியசாமி கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கோயிலுக்கு சொந்தமான புறம்போக்கு நிலமான 10.64 ஹெக்டேர் நிலத்தை விவசாயம் அல்லது கோயிலுக்கு வருவாயை ஈட்டக்கூடிய கட்டுமானங்களை உருவாக்க பயன்படுத்தலாம் என இந்து சமய அறநிலையத்துறை சட்டம் கூறுகிறது. ஆனால் கோயில் புறம்போக்கு நிலத்தை கிராம நத்தமாக மாற்றிய வருவாய்த்துறை, அந்த நிலத்தை 81 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா போட்டு கொடுத்துள்ளது.

இதனை எதிர்த்து கோயில் சார்பில் பரம்பரை அறங்காவலர் தொடர்ந்துள்ள வழக்கில், ‘கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை தடையில்லா சான்று பெறாமல் பட்டா வழங்கக் கூடாது என விதிகள் உள்ள நிலையில், அவற்றை புறந்தள்ளிவிட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது. கோயில் விழா மற்றும் சடங்குகளுக்கு மட்டுமே தற்காலிகமாக கோயில் நிலத்தை பயன்படுத்தலாம் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் ஆக்கிரமிப்பாகத்தான் கருத வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது வட்டாட்சியர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘பட்டா வழங்கப்பட்ட இடம் அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை’ எனவும், அரசு நிலம் தான் பட்டா போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, கோயிலின் நிலத்தை அதன் வருமானத்திற்கு வழிசெய்வதை தவிர பிற நோக்கத்திற்காக பயன்படுத்தவோ, வேறு யாருக்கு வழங்கவோ முடியாது என அறநிலைய துறை சட்டம் மற்றும் வருவாய் துறை நிலை விதிகள் உள்ளதால், அறநிலையத்துறை ஆணையரின் தடையில்லா சான்று இல்லாமல் பட்டா மாற்றம் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.