அமெரிக்க அதிபர் டிரம்ப் Pt web
தமிழ்நாடு

”ட்ரம்ப் வரிவிதிப்பால் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு!

இந்தியா மீதான ட்ரம்பின் வரி விதிப்பால், தமிழ்நாட்டில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக, மத்திய பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அதிர்ச்சிகரமான எச்சரிக்கையை முன்வைத்துள்ளார்.

PT WEB

மாநில நிதி அமைச்சர்களுடனான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கான முன்னோடி ஆலோசனைக் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு

தொடர்ந்து இக்கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியபோது, ”தமிழகத்தின் சரக்கு ஏற்றுமதியில் 31 சதவீதம் அமெரிக்க சந்தையை மட்டுமே நம்பியுள்ளது. தற்போது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகளால், தமிழகத்தின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இத்துறையில் வாழ்வாதாரம் பெறும் 75 லட்சம் தொழிலாளர்களில், சுமார் 30 லட்சம் பேரின் வேலைவாய்ப்பு உடனடியாகப் பறிபோகும்” அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”ஏற்றுமதிச் செலவு தாறுமாறாக உயர்ந்துள்ளதால், திருப்பூரின் பின்னலாடை நிறுவனங்கள், கோவை மற்றும் கரூரின் ஜவுளி ஆலைகள் எனப் பல்லாயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இது தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனை முடக்குவதோடு, தேசிய அளவிலும் ஜவுளி ஏற்றுமதியில் பெரும் சரிவை ஏற்படுத்தும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்தச் சர்வதேச நெருக்கடியிலிருந்து தொழிலாளர்களைக் காக்க, ஜவுளித் துறைக்கு வட்டி மானியம் மற்றும் சிறப்பு நிதி உதவித் தொகுப்பை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் எனத் தமிழகம் வலியுறுத்தியுள்ளது.