தமிழ்நாடு

கட்சி மாறி வாக்களித்ததாக கூறி ரகளை; அடிதடிக்கு மத்தியில் முடிவுக்கு வந்த மறைமுகத் தேர்தல்

நிவேதா ஜெகராஜா

தமிழத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றியது. பல இடங்களில் போட்டியின்றி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றிய திமுக, ஒருசில இடங்களில் கடும் போட்டியை சந்தித்தது. இந்நிலையில், ஒருசில நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அங்கெல்லாம் நேற்று தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் நடைபெற்றது.

இதில் கோவை வெள்ளலூர் மற்றும் மதுரை திருமங்கலத்தில் நகராட்சி தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. அதில் மதுரை திருமங்கலத்தில், திமுக சார்பில் ரம்யா என்பவரும் அதிமுக சார்பில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் உமா என்பவரும் போட்டியிட்டனர். 27 உறுப்பினர்களை கொண்ட நகராட்சியில் திமுக கூட்டணியின் பலம் 20ஆக உள்ள நிலையில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தலா 11 வாக்குகள் கிடைத்தன.

கட்சி மாறி சிலர் அதிமுகவுக்கு வாக்களித்ததாக கூறி திமுகவினர் இருதரப்பாக பிரிந்து மோதலில் ஈடுபட்டனர். ஒரு தரப்பினர் நகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்டனர். தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இறுதியில் 15 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளரான ரம்யா முத்துக்குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் 6 வாக்குகள் பெற்றார். 6 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

இதேபோல கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சித் தலைவர், துணைத்தலைவர் தேர்தலுக்காக அதிமுக கவுன்சிலர்கள் 8 பேரும், திமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 7பேரும் வந்திருந்தனர். அப்போது திமுகவினர் சிலர் கூட்டமாக வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு கூடியவர்களை வெளியேற்ற காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர். அதிமுகவினர் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதில், வாகனத்தின் கண்ணாடி ஒன்று சேதமடைந்தது. மேலும், திமுகவை சேர்ந்த செந்தில் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இதனிடையே வாக்குச்சீட்டுகளை கிழித்து இடையூறு செய்ததாக கூறி திமுக கவுன்சிலர்கள் வெளியேற்றப்பட்டனர். அடிதடி, வாக்குவாதம் என ரகளைகள் முற்றியதால் வஜ்ரா வாகனம் வரவழைக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில், அதிமுகவின் மருதாச்சலம் தலைவராகவும் கணேசன் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.