எழுத்தறிவு சதவீதத்தில் பின்தங்கிய தருமபுரி மாவட்டத்திலிருந்து இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளது பெருமையாக உள்ளதாக கீர்த்திவாசன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியிடப்பட்ட யுபிஎஸ்சி தேர்வு முடிவில் இந்திய அளவில் 29-ம் இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார் தருமபுரியை சேர்ந்த வெங்கடேஷ்பாபு- தீபா தம்பதியரின் மகன் கீர்த்திவாசன். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றபின் இன்று தனது சொந்த ஊரான தருமபுரிக்கு வந்தார் கீர்த்திவாசன். அங்கு அவருக்கு சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்ரமணி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் தருமபுரியில் உள்ள பொதுமக்களும் கீர்த்திவாசனை நேரில் சந்தித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த கீர்த்திவாசன் விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் வாழ்வில் எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி பெறவைக்கும் என்றார். இளையதலைமுறையினர் தமது இலக்கை தீர்மானித்துக் கொண்டு, எந்தப் பாதையில் சென்றால் இலக்கை அடைய முடியும் என்று முடிவு செய்து அந்தப் பாதையில் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
“ பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உள்ள அனைத்து வழிகளையும் தெளிவுப்படுத்த வேண்டும். பிள்ளைகளை குறிப்பிட்ட ஒன்றை படி என அழுத்தம் கொடுக்கக் கூடாது. எனது வெற்றிக்கு அடித்தளமிட்டவர்கள் எனது பெற்றோர்கள். சிறு வயதிலிருந்தே அவர்கள் நினைக்கும் பாதையில் நான் செல்ல வேண்டும் என்று திணிக்கவில்லை. எனது பாதையை நானே சுதந்திரமாக தேர்ந்தெடுக்க என்னை என் பெற்றோர்கள் அனுமதியளித்தனர். தம்மை பற்றிய ஆழ்ந்த புரிதலே இளைஞர்களுக்கு வெற்றியை அளிக்கும். தமிழகத்தில் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டத்திலிருந்து, யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றது மிகுந்த பெருமையை தருகிறது. தருமபுரி மாவட்டம் தற்பொழுது கல்வியில் முன்னேறி வருகிறது. எனது பயிற்சிக்காலம் முடிந்த பிறகு தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க, யுபிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்க முயற்சிப்பேன்” என கீர்த்திவாசன் தெரிவித்தார்.