தமிழ்நாடு

கொள்ளையடிப்பார்கள்; சுற்றுலா வேனில் ஏறி தப்பிப்பார்கள் - திருச்சி கொள்ளையர்களின் பக்கா பிளான்!

webteam

பஞ்சாப் நேஷனல் வங்கி, திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளைகளில் பயன்படுத்தப்பட்ட வேனை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

திருச்சி லலிதா ஜூவல்லரி கடையில் கடந்த 2ஆம் தேதி அதிகாலை கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. தீவிர விசாரணைக்குப் பின் திருவாரூரைச் சேர்ந்த மணிகண்டன், கனகவள்ளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொள்ளையில் ஈடுபட்ட சுரேஷ் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவர் கொடுத்த தகவலின்படி மதுரையைச் சேர்ந்த கணேசன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். 

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஜனவரி மாதம் மதுரை பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடைபெற்ற கொள்ளைக்குறித்தும் தகவல் கிடைத்தது. நகைக்கடையில் கொள்ளையடித்த முருகன் கும்பலே வங்கி கொள்ளையிலும் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக கணேசனை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க ஸ்ரீரங்கம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 470 சவரன் நகைகள் வாடிக்கையாளர்களுடையது. நகைகள் உருக்கப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

மேலும், விசாரணையில் திருச்சியில் பஞ்சாப் நேஷனல் வங்கி, லலிதா ஜூவல்லரி கொள்ளைகளுக்கு பயன்படுத்திய சுற்றுலா வேன் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். முருகன் கொடுத்த தகவலின்படி மறைத்து வைக்கப்பட்டிருந்த வேனை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்டவுடன், சுற்றுலா பயணிகள் போல கொள்ளைக்கும்பல் வேனில் ஏறி தப்பித்துச்சென்று விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மேலும் வேனிலேயே நகைகளை எடைபோட இயந்திரமும் வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை தொடர்பாக கணேசன் தந்த தகவலின்பேரில் 3 பேரைபிடித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்