தமிழ்நாடு

கட்டுக்கடங்காத கொரோனா... பொது முடக்கம் தீர்வா.? சாமானியர்கள் என்ன செய்வார்கள்?

kaleelrahman

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் கடைசி ஆயுதமாக பொது முடக்கத்தை கையில் ஏந்தியுள்ளன. இந்நிலையில் தமிழகத்திலும் முழுமையான பொது முடக்கம் கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

கொரோனா 2ஆவது அலை மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா முதல் அலை தந்த அனுபவம், தடுப்பூசி உள்ளிட்ட சாதகமான அம்சங்கள் இருந்தாலும் அவற்றையும் மீறி 2ஆவது அலையில் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் இறப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் 2ஆவது அலை முதன்முதலாக வேகமெடுக்கத் தொடங்கிய நிலையில் அங்கு கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி முழு பொது முடக்கம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அங்கு தற்போது நிலைமை கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது.

இதே போல டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் முழு பொது முடக்கம் காரணமாக தொற்று பரவும் வேகம் கட்டுக்குள் வந்துள்ளது. எனினும் கேரளா, கர்நாடகா, தமிழகம் போன்ற சில மாநிலங்களில் மட்டும் தொற்று பரவும் வேகம் அதிகமாக உள்ளது. இதைத் தொடர்ந்து கர்நாடக அரசும் அண்மையில் முழு பொது முடக்கத்தை அறிவித்தது. தற்போது கேரள அரசும் வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு பொது முடக்கத்தை அறிவித்துள்ளது. மக்களின் உயிர்களை காக்க வேண்டிய அவசியம் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் முழு பொது முடக்கம் தேவை என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன.

ஒருபுறம் முழு பொது முடக்கத்தை கோரி வலியுறுத்தல்கள் வந்தாலும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தையும் பார்க்க வேண்டிய அவசியம் அரசுக்கு உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் புதிய அரசு பல்வேறு அம்சங்களையும் சீர்தூக்கி பார்த்து உரிய முடிவை எடுக்கும் என நம்பலாம்