நிலத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்தாமல் விட்டால் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு சீல் வைக்கப்பட்டும் என்று மாநில வருவாய் துறை எச்சரித்துள்ளது.
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்திற்காக தமிழ்நாடு அரசு, 1992ஆம் ஆண்டு 10 ஏக்கர் நிலத்தை கிண்டியில் ஒதுக்கீடு செய்தது. இந்த இடத்தில் பல்கலைக் கழகம், நிர்வாகக் கட்டடம் மற்றும் நூலகம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதற்காகப் பல்கலைக் கழகம், அரசுக்கு 87.45 கோடி ரூபாய் தொகையை செலுத்த வேண்டும். இது தொடர்பாக கடந்த 2012ஆம் ஆண்டு பல்கலைக் கழகத்திற்கு மாநில வருவாய் துறை நோட்டீஸ் அனுப்பியது. பதில் வராததால், மீண்டும் இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கும் எந்தவித பதிலும் வரவில்லை.
இந்நிலையில் நிலுவை தொகையை செலுத்தாவிட்டால், பல்கலைக் கழகத்திற்கு சீல் வைக்கப்படும் என்று வருவாய் துறை எச்சரித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, பல்கலைக்கழகத்திற்கு சென்று வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதன்பின்னர் பல்கலைக் கழக நிர்வாகிகளிடம் நோட்டீஸை கொடுத்துள்ளனர்.
இந்த கட்டடத்தில்தான், பல்கலைக் கழகத்தின் நிர்வாக அலுவல், விடைத்தாள் திருத்தம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.