தொலைதூரக்கல்வி இயக்குநர் பொறுப்புத் தலைமை பி.தேவமைந்தன் pt
தமிழ்நாடு

சென்னை பல்கலைக்கழகம்| தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான தேதி நீட்டிப்பு!

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் வரும் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி இயக்குநர் பொறுப்புத் தலைமை பி.தேவமைந்தன் தெரிவித்துள்ளார்.

PT WEB

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை தேதி அக்டோபர் 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 170 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பல புதிய படிப்புகள் அறிமுகமாகி, மாணவர்களுக்கு நேரடி அனுபவம் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு 23,000 மாணவர்கள் சேர்ந்து, 25,000 மாணவர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி வளாகத்தில் ஏ24 பிரிவு முதுகலை தமிழ் மாணவர்களின் கூடுகை நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற்றது.

தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்களின் கூடுகை நடைபெறுவது இது 3 ஆவது ஆண்டாகும். பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி இயக்குநர் பொறுப்புத் தலைமை பி.தேவமைந்தன் மற்றும் சங்கப்பலகை மேம்பாட்டுத்துறை தலைவர் கி. சங்கரநாராயணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் முதுகலை தமிழ் முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை திரு. சங்கரநாராயணன் வழங்கினார். தமிழ் படித்த மாணவர்களுக்கான வாய்ப்புகளை அவர் விரிவாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்வின் மூலம் தொலைதூர வழி பயிலும் மாணவர்களுக்கு நேரடி அனுபவமும், நல்ல வழிகாட்டுதல்களும் கிடைத்ததாக பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். மாணவர்களுக்கான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு துறைத்தலைவர் சங்கரநாராயணன் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோர் விடையளித்தனர்.

நிகழ்ச்சிக்குப்பின்னர் பேசிய இயக்குநர் பொறுப்பு தலைமை திரு. தேவமைந்தன், ”பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதலில் தொலைதுரக்கல்வி மற்றும் நேரடி கல்வி மையம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொலைதூரக்கல்வியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பலன் பெற முடியும். மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவதில் இருந்த பிரச்னைகள் சரிசெய்யப்பட்டுள்ளன. துணைவேந்தர் இல்லாததால் சில பிரச்னைகள் இருந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதலில் பல்கலைக்கழகக் குழுவின் நடவடிக்ககளால் பிரச்னைகள் சரிசெய்யப்பட்டுள்ளன.

மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை தருவதில் தாமதம் என்றிருந்த நிலையில் தற்போது அந்த பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல சென்னை பல்கலைக்கழகம் 170 ஆவது ஆண்டு கொண்டாடும் நிலையில், தொலைதூர கல்வியில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதியதாக 9 படிப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தொலைதூரக் கல்வியில் இதுவரை 23 ஆயிரத்திற்கும் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளது” என பேசினார்.

மேலும் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் வரும் அக்டோபர் 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு மாணவர் சேர்க்க 25 ஆயிரத்தை தாண்டும் எனவும் தேவமைந்தன் நம்பிக்கை தெரிவித்தார்.