நிர்மலா தேவி விவகாரம் வெளிவந்தால் பல அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குள்ளாகும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
சென்னையிலிருந்து இன்று காலை புனே செல்ல இருந்த‘நக்கீரன்’ஆசிரியர் கோபாலை, விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124-ன் கீழ் ஜாம்பஜார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை சூளைமேட்டில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சரிடம் கோபாலின் கைது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ''இன்று காலைதான் சென்னை வந்தேன். பிறகு முக்கிய சந்திப்பில் கலந்துகொண்டேன். அதனால் ‘நக்கீரன்’ஆசிரியர் கோபாலின் கைது குறித்து எந்த விவரமும் தெரியாது'' எனத் தெரிவித்தார்.
பத்திரிகை சுதந்திரத்தை பாஜக பறிப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பத்திரிகை சுதந்திரத்தை பற்றி பேச திமுகவுக்கு உரிமையும், தகுதியும் இல்லை என்றும் திமுகவுக்கு பதில் சொல்லக்கூடிய நிலையில் பாஜக இல்லை என்றும் தெரிவித்தார்.
அப்போது நிர்மலா தேவி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன்,“நிர்மலா தேவி விவகாரம் வெளிவந்தால் பல அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குள்ளாகும். அந்த அச்சத்தின் காரணமாகவே இங்கு பெரிய சதி நடந்து வருகிறது. ஆளுநரை குற்றம்சாட்டுவது போல் அவரை இணைத்து பேசுவதும்கூட மிகப்பெரிய சதிச்செயல் என்று நான் நினைக்கிறேன்”என அவர் தெரிவித்தார்.