தமிழ்நாடு

டெங்கு இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்: அஷ்வினி குமார் புதிய தலைமுறைக்கு பேட்டி

Rasus

டெங்கு இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஷ்வினி குமார் சௌபே தெரிவித்துள்ளார். சென்னை வந்துள்ள அவர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்புப் பணிக்கு கூடுதலாக 256 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சூழலில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஷ்வினி குமார் சௌபே சென்னை வந்து ஆய்வு மேற்கொண்டார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்த அஷ்வினி குமார் சௌபே, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது தமிழக அரசு மேற்கொண்டுவரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

பின்னர் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், "டெங்கு பாதிப்புகள் தொடர்பாக தமிழக அரசுக்கு நிதி வழங்குவது குறித்து ஆலோசனைக்குப் பின் பரிசீலனை செய்யப்படும். டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்துவதோடு, டெங்கு இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம். டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் விரைவில் உரிய தீர்வு கிடைக்கும்" என்றார்.