பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கேட்டறிந்தார்.
கேரளாவில் பன்றிக்காய்ச்சல் காரணமாக அவ்வப்போது ஒரு சிலர் இறந்துவிடும் செய்திகள் வெளியாகி வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடகாவிலும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு 177 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதுவரை 5 பேர் அங்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகா மட்டுமின்றி தெலுங்கானாவிலும் 50க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்திலும் பன்றிகாய்ச்சல் பாதிப்பு இருப்பதாக வெளியான தகவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. நெல்லை 4 பேரும், கோவையில் 2 பேரும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து அனைத்து மாநிலங்களுடனும் மத்திய சுகாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர்களிடம் அவர் பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அத்துடன் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் பன்றிக்காய்ச்சல் தொடர்பாக பேசியுள்ளார்.
பன்றிக்காய்ச்சல் தொடர்பாக அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக நாளை அனைத்து மாநில சுகாதாரச் செயலர்களுடனும் அவர் வீடியோ கால் மூலம் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.