அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிய விபத்தில் வடமாநில இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து வேட்டுவபாளையத்தில் உள்ள அரிசி ஆலையில் தங்கி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராம்குமார் (27) மற்றும் மிதுலேஸ் (24) ஆகியோர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு இருவரும் வேட்டுவபாளையத்திலிருந்து பைக்கில் அவிநாசி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, நம்பியாம்பாளையம் அருகே வரும்போது முன்னே சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றனர். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்குடன் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் முன்னே சென்ற லாரியின் சக்கரத்திற்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர்.
இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். பின்னர், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.