தமிழ்நாடு

மெட்ரோவில் இதை செய்தால் ஜெயில் கன்ப்ஃர்ம்!

மெட்ரோவில் இதை செய்தால் ஜெயில் கன்ப்ஃர்ம்!

webteam

கோயம்பேடு - நேரு பூங்கா இடையே இன்று தொடங்கி வைக்கப்படும் சுரங்க மெட்ரோ ரெயிலை தவறாகப் பயன்படுத்தினால் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மது அருந்தி விட்டு பயணம் செய்பவர்கள், பயணிகளுக்குத் தொல்லை கொடுப்பவர்கள், மெட்ரோ ரயில் சொத்துகளுக்கு ஊறுவிளைப்பவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். ஆபத்தான பட்டாசு, வெடி உள்ளிட்ட பொருள்களை கொண்டு செல்பவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். மெட்ரோ ரயில் சொத்துகளில் போஸ்டர் ஒட்டுவது, எழுதுவது, வரைவது ஆகியவற்றுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை ரூ. 1,000 அபராதம்.

மெட்ரோ ரெயில் கூரை மீது பயணம் மேற்கொள்ள முயன்றால் ஒரு மாதம் சிறைத்தண்டனை, ரூ. 50 அபராதம். பயணச்சீட்டு இல்லாமல் ரெயில் நிலையத்துக்குள் நுழைபவர்களுக்கு 3 மாதம் சிறைத்தண்டனை அல்லது ரூ.250 அபராதம்.

மெட்ரோ ரெயில் தண்டவாளங்களில் நடந்தால் 6 மாதம் சிறைத்தண்டனை அல்லது ரூ. 500 அபராதம். ஓடும் ரயிலை தடுத்து நிறுத்தினாலோ, தாக்குதல் நடத்தினாலோ 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம். மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு தொல்லை கொடுத்தால் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ. 1,000 அபராதம்.

பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தால் ரூ.50-ம், பயணத்துக்கான பயணக் கட்டணத்தோடு அபராதம். ரயிலில் உள்ள தொலைத்தொடர்பு சாதனங்களைத் தேவையில்லாமல் பயன்படுத்தினாலோ, அவசர கால பொத்தானை தவறாகப் பயன்படுத்தினாலோ ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம்.

உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு ரூ.500 அபராதம், 6 மாதம் சிறைத் தண்டனை. ரயிலை விபத்துக்குள்ளாக்குவது, கொலை முயற்சி, சக பயணிகளைத் தாக்கி குற்றங்களில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். மெட்ரோ ரெயில் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை. பொய்யான புகார்கள், பொய்யான நிவாரணம் கோருபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையோடு அபராதமும் விதிக்கப்படும்.