தமிழ்நாடு

”மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு எதிராக நிற்கணும்” - காங்கிரஸூக்கு மநீம ஆதரவு

webteam

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் - காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்,விஜய் வசந்த் எம்.பி,சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா உள்ளிட்டோர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார். இதுகுறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன் :

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகவும், தேர்தலுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் நீதி மய்யம் சார்பில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மேலும் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர்," இந்த கூட்டணி என்பது இடைத்தேர்தலுக்கானது" என்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தற்போது யோசிக்க தேவையில்லை எனவும் கூறினார். 

கடந்த காலங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி குறித்து விமர்சனம் செய்து விட்டு தற்போது அவர்களுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக பதில் அளித்த அவர், இந்த முடிவு என்பது தேச நலனுக்காக எடுத்த முடிவு என்றும்,போர் நடைபெறும்போது எதிர் எதிராக இருந்தவர்களும் ஒன்றாக இணைய வேண்டும் என தெரிவித்தார். மேலும், மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு எதிராக நின்றாக வேண்டும் என அவர் தெரிவித்தார்.