தமிழ்நாடு

உடுமலை கவுசல்யா விவகாரம்.. ஒரு வாரத்தில் குழு அமைத்து விசாரணை..!

Rasus

இந்திய இறையாண்மைக்கு எதிராக உடுமலை கவுசல்யா பேசியது தொடர்பாக ஒரு வாரத்தில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என வெலிங்டன் கண்டோன்மெண்ட் முதன்மை அதிகாரி ஹரிஸ்வர்மா தெரிவித்துள்ளார்.

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா, அதன்பின்னர் ஆணவக் கொலைக்கு எதிராக குரல் கொடுத்து சமூகப்
பணிகளில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு அரசுப் பதவியும் வழங்கப்பட்டது. அதன்படி, 2016-ஆம் ஆண்டு குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்டில் கணக்கு பிரிவில் பணியில் சேர்ந்தார் கவுசல்யா.

இதனிடையே நிமிர்வு கலையகத்தின் பொறுப்பாளர் சக்தி என்பவரை சமீபத்தில் கவுசல்யா மறுமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் நடந்து முடிந்த சில மணி நேரங்களிலேயே, சக்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்கள் மூலம் வைக்கப்பட்டது. அது சர்ச்சையாகவும் மாறியது.

இந்நிலையில் அண்மையில் பிபிசிக்கு பேட்டியளித்த அவர், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கவுசல்யா மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்றது. அதன் முடிவில் கவுசல்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கவுசல்யா மீது பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், குழு அமைத்து ஒருவாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்றும், அந்த அறிக்கை டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் வெலிங்டன் கண்டோன்மெண்ட் தெரிவித்துள்ளது. அறிக்கை அடிப்படையில், அவர் மீது மேற்கொண்டு நடவடிகை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.