முதல்வரின் நெருங்கிய நண்பராக அறியப்படும் விஷ்ணு ரெட்டி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது எதிர்க்கட்சி தரப்பில் இருந்து புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விஷ்ணு ரெட்டி மற்றும் அவரது சகாக்கள் குறித்து விரைவில் ஆதாரங்களை வெளியிடுவேன் எனக் கூறி அரசுக்கு எதிராக தீவிரமாக இறங்கியிருக்கிறார் உதயநிதி என பேச்சுகள் அடிபடத் தொடங்கிவிட்டன. விஷ்ணு ரெட்டி குறித்து உதயநிதி என்ன பேசினார்?... யார் இந்த விஷ்ணு ரெட்டி?... உதயநிதி வசம் இருக்கும் ஆதாரங்கள் என்னவாக இருக்கும் என்பன உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்...
காவல் துறை மானியக் கோரிக்கை மீதான தனது உரையை பேரவையில் முதலமைச்சர் விஜய், இன்று வாசித்து முடித்த நிலையில், அது தொடர்பாக அவையில் விவாதம் இல்லை என தெரிவித்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர். முதல்வரின் குற்றச்சாட்டுகளால் கொதித்துப்போன திமுக, அவையைவிட்டு வெளியேறிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ”3 நாட்கள் நேரம் இருந்தும், மனப்பாடம் செய்துவிட்டு ஒப்புவித்தல் போட்டியில் பேசியதைப்போல முதல்வர் பஞ்ச் டயலாக், சினிமா வசனங்களை மட்டுமே பேசினார், எங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசியவர், நான் இந்த அரசின் மீது வெளிப்படையாக குற்றச்சாட்டு வைக்கிறேன், முதலமைச்சரின் நண்பரும், அவரது அலுவலகத்தில் ஆலோசகராக பணி செய்யக் கூடியவருமான விஷ்ணு ரெட்டிக்கு சமீபத்தில் ஓர் அமைச்சர் பேசியபோது நன்றி சொன்னார். விஷ்ணு ரெட்டியின் மச்சான் சுஜய் ரெட்டி. இவருடைய தொழில்முறை பங்குதாரர் அனில் ரெட்டி. இவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் அரசை நடத்துகிறார்கள். இவர்களின் கட்டுப்பாட்டில்தான் கனிம வளங்கள் இருக்கின்றன. இதற்கான ஆதாரங்களை நான் ஒவ்வொன்றாக வெளியிடப் போகிறேன் என உதயநிதி சவால் விடுத்திருக்கிறார்.
முதலமைச்சர் விஜயின் இளமைக்கால நண்பராக அறியப்படும் விஷ்ணு ரெட்டி, முதல்வரின் ஆலோசகராக இருந்துவருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாததும் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆட்சி அமைக்க அழைப்பதற்கான கடிதத்தைக் கொடுப்பதற்காக ஆளுநர் மாளிகைக்கு முதலமைச்சர் விஜய் சென்றபோது விஷ்ணு ரெட்டியும் உடனிருந்தவர்.
முக்கியமான அரசியல் விவகாரங்களில் முதல்வருக்கு இவர் பக்கபலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அவர் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூகவலைதளங்களில் பரவிவரும் வேளையில், ஆதாரத்தைக் காட்டுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சவால் விட்டிருப்பது, முதல்வரின் இன்றைஉய உரைக்கு கிளப்பிய அதே ஆர்வத்தை மக்கள் மத்தியில் கிளப்பிவிட்டிருக்கிறது.