தமிழ்நாடு

திமுக இளைஞரணி செயலாளராகிறார் உதயநிதி?

திமுக இளைஞரணி செயலாளராகிறார் உதயநிதி?

webteam

திமுக இளைஞரணி செயலாளராக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினை நியமிக்க அக்கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக இருந்த மு.பே.சாமிநாதன் அண்மையில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனையடுத்து அப்பதவிக்கு நிர்வாகியை தேர்வு செய்யும் பணியை கட்சியின் தலைமை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் மேலாண்மை இயக்குநரான உதயநிதி, அப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

நாளையோ அல்லது அடுத்த ஓரிரு நாள்களிலோ அவர் திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவியை ஏற்பார் என்றும் கூறப்படுகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

மேலும் திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தனக்கு பொறுப்பு தேவையில்லை என்றும் தொண்டனாகவே இருந்து சேவை செய்ய விரும்புவதாகவும் கூறியிருந்தார்.