Udhayanidhi Stalin vs Vijay PT
தமிழ்நாடு

மாற்றி மாற்றிப் பேசும் அமைச்சர்கள்.. விஜய் முன்னிலையில் உதயநிதி ஆவேசம்.. முதல்வர் பதில் என்ன?

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பினார்.

Praveen Joshva L

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மேகதாது அணை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ”மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை என்ன செய்தது? இதுகுறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை எப்போது கூட்டுவீர்கள்” எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும் தவெக அரசு அமைந்தபிறகு மேகதாது அணை விவகாரத்தில் இதுவரை இல்லாத வேகத்தில் கர்நாடக அரசு செயல்பட்டு வருவதாக கூறிய அவர், காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்பதாகவும், ஆனால், இங்கே அனைத்துக் கட்சி கூட்டத்தைக்கூட்ட தமிழ்நாடு அரசு மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

அதோடு, முதலமைச்சர் கர்நாடகா செல்வதாக வேளாண் அமைச்சர் பேட்டி அளிக்கிறார். இன்னொரு அமைச்சர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறுகிறார் என்று தெரிவித்த அவர், கர்நாடகா செல்வதாக வேளாண் அமைச்சர் சொன்னதை இரண்டு அமைச்சர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர் என்றும் இதுகுறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து இதற்கு விளக்கமளித்த முதல்வர் விஜய், ”காவிரிப் பிரச்னையில் ஒரு முயற்சி எடுத்துப் பார்க்கலாமே என்று நினைத்து பெங்களூரு பயணத்தைப் பற்றி யோசித்து கேட்டது நான்தான். இன்றைய காலகட்டத்தில் பகை நாடுகளே பேசித் தீர்க்கப் பார்க்கிறாங்க, பக்கத்து மாநிலத்தோட பேசிப் பார்த்தால் என்னன்னு நினைத்தேன்” என்று கூறினார்.

மேலும், இந்தப் பயணத்தால் அவமானம் நேர்ந்தால் தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்கிக்கொள்ள நான் தயார் என்றும் பதில் அளித்தார். அதேபோல எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்குப் பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், கர்நாடக முதல்வர் வேறு ஒருநாளில் பேச்சுவார்த்தை நடைபெறலாம் எனச் சொன்னதால் பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.