கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "மக்களைப் பிரிக்கும் சனாதனத்தை டெங்கு, கொசுவைப்போல ஒழிக்க வேண்டும்" என்று பேசியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, வடமாநிலங்களில் உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. மேலும் சில சாமியார்கள் உதயநிதிக்கு மிரட்டலும் விடுத்திருந்தனர். எனினும், தனது கருத்தில் உதயநிதி உறுதியாக இருந்த நிலையில், நீதிமன்றத்தில் உதயநிதிக்கு எதிராக நடைபெற்ற வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்தச் சூழலில் தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக தனது முதல் உரையை உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், புதிய அரசுக்கு வாழ்த்துகள் தெரிவித்ததோடு, ’வெல்க தமிழ்.. வாழ்க தமிழ்நாடு.. முக்கியமாக, மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்’ என்று கூறினார்.
இதற்கு கையெடுத்து கும்பிட்டு, முதல்வர் விஜய் ரியாக்ஷன் கொடுத்தார். இதனிடையே உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ’உதயநிதி தனது சட்டமன்ற உரையிலேயே கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையான சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசியிருப்பது, அரசியல் ரீதியாக இன்னும் பக்குவப்படவில்லை என்பதைத்தான் காட்டுகிறது என்றும், இந்துக்களின் மீது தொடர்ந்து நீங்கள் கல்லெறிவது கடும் கண்டனத்திற்குரியது’ என்றும் கூறியுள்ளார்.
அதே நேரம், உதயநிதியின் கருத்தை பல்வேறு வடமாநில ஊடகங்களும் முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ள நிலையில், அங்கு இது பெரும் விவாதத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.