தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், அதிமுக பிரமுகர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் எரிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டியில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது உண்டான மோதலின் எதிரொலியாக, இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதிமுக பிரமுகர் ஆரோக்கியராஜ் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறி அமமுக, திமுக நிர்வாகிகள் அவரை தாக்கியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, ஆரோக்கியராஜை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்டு அங்கு வந்த அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன், திமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த நிலையில், அதிமுக பிரமுகர் ஆரோக்கியராஜ் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்துக்கு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றதால் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.