வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில், ஒரே நேரத்தில் இரண்டு புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில், வரும் 21ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்திற்கு தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கேரளா மற்றும் கர்நாடகாவை ஒட்டிய, தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கக்கடல் மற்றும் அரப்பிகடலில் என இரண்டு புயல்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், வரும் அக்டோபர் 22, 23 தேதிகளில் 20 செ.மீ அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.