தமிழ்நாடு

கலக்கத்தை ஏற்படுத்தும் சென்னை ஃபீனிக்ஸ் மால்: தனிமைப்படுத்தப்பட்ட ஊழியர்கள்!

webteam

சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையில் பணியாற்றிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 110 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. இதனால்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்தது. அதன்படி தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், நெல்லையும் கோவையும் முதலிடத்திலுள்ளன. இந்த மாவட்டங்களில் தலா 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கடுத்த இடத்தில் சென்னையும், ஈரோடும் உள்ளன. இவ்விரு மாவட்டங்களிலும் தலா 26 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நபர்கள் வசித்த இடங்கள், பணியாற்றிய இடங்களை கண்டறிந்து அங்குள்ளவர்களை சுகாதாரத்துறை தனிமைப்படுத்தி வருகிறது. முன்னதாக சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையில் பணியாற்றிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து தோல் பொருட்கள் விற்பனை செய்யும் அந்த குறிப்பிட்ட கடையில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் மார்ச் 10 முதல் 17ம் தேதிக்குள் அந்தக்கடைக்குச் சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.