ஆத்தூர் அருகே 144 தடை உத்தரவையும் மீறி இயக்கப்பட்ட ஜவ்வரிசி ஆலையில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சதாசிவபுரம் பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான ஜவ்வரிசி ஆலை உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ரவிக்கு சொந்தமான ஜவ்வரிசி ஆலை ரகசியமாக தொடர்ந்து இயக்கப்பட்டு வந்துள்ளது. இந்த ஆலையில் 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
மரவள்ளிக்கிழங்கு கழிவுகளை கொண்டு இயற்கை எரிவாயு தயாரிக்கும் தொட்டி இந்த ஆலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தத் தொட்டிக்கு கழிவுகள் செல்லும் பாதையை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர் கார்த்தி என்பவர் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்ட அதே ஆலையில் பணிபுரியும் அவரது சித்தப்பா ஆறுமுகம் காப்பாற்ற முயன்றபோது அவரும் விஷவாயு தாக்குதலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.
விஷவாயு தாக்கியதில் மயங்கி விழுந்த இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரெங்கும் தடை உத்தரவு அமல்படுத்தி இருக்கும்போதும் அதனை மதிக்காமல் ஆலை இயக்கப்பட்டதால் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.