தமிழ்நாடு

கீழடியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு

webteam

கீழடியில் நடைபெறும் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் இரண்டு மனித எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. 5 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியின் தொடர்ச்சியை கண்டறியும் வகையில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. இதில் ஏற்கனவே 10 வரிசை கொண்ட செங்கல் கட்டுமானம், நான்கு முதுமக்கள் தாழி, பத்துக்கும் மேற்பட்ட மண்பானைகள், தானியங்கள் சேமித்து வைக்கும் குடுவை என பல்வேறு தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்பொழுது மேலும் நான்கு முதுமக்கள் தாழியும் அதில் ஒரு முதுமக்கள் தாழியில் கை கட்டப்பட்ட நிலையில் உள்ள மனித எலும்புக் கூடுகள் மற்றும் படுத்த நிலையில் உள்ள மனித எலும்புக் கூடுகளும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எலும்புக் கூடுகளின் மாதிரி எடுக்கப்பட்டு அவை மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் மூலம் மரபியல் சோதனை செய்யப்பட உள்ளது.

கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எலும்புக் கூடுகள் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்குமென தெரிவித்துள்ள தொல்லியல் துறையினர் மரபியல் பரிசோதனை மூலம் தொன்மையான மக்கள் எந்த நாகரீக மக்களோடு ஒத்துப்போகிறது என்பது தெரிய வரும் எனத் தெரிவித்துள்ளனர்.