தனியார் பள்ளியிலிருந்து நேற்று காணாமல் போன இரண்டு மாணவிகள் விடுதி மாடியிலிருந்து குதித்ததில், ஒரு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் அரிசிப்பாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கவிஸ்ரீ மற்றும் ஜெயராணி என்கிற இரண்டு மாணவிகள் 8-ஆம் வகுப்பு படித்து வந்தனர். மாணவிகள் இருவரும் நெருங்கிய தோழிகள் ஆவர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்ற மாணவிகள் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன அவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் காணாமல் போன இரண்டு மாணவிகளும், இன்று காலை உணவு விடுதி ஒன்றின் 4-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டனர். இதில் ஒரு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நெருங்கிய தோழிகளான இருவரையும் ஆசிரியர் வகுப்பில் பிரித்து உட்கார வைத்ததாகத் கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் இரண்டு பேரும் மனமுடைந்து தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது.