ஆண்டிபட்டி அருகே மலையடிவார விவசாய தோட்டங்களில் இருந்து பலத்த காயங்களுடன் இரண்டு விவசாயிகளின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலையில் தாக்கப்பட்டு தலை நசுங்கி ஒரு விவசாயி உயிரிழந்திருப்பதாகவும், 16 இடங்களில் வெட்டப்பட்டு கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மற்றொரு விவசாயி இறந்திருப்பதாகவும் முதல் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வாய்க்கால்பாறை மலைஅடிவாரத்தில் இருக்கும் விவசாய தோட்டங்களில் இருந்து நண்பர்களான மணி மற்றும் கருப்பையா ஆகிய இரண்டு விவசாயிகளின் உடல் மீட்கப்பட்டுள்ளன.
உடலில் பலத்த காயங்களுடன் கடந்த 26ஆம் தேதி மீட்கப்பட்ட நிலையில், முதலில் வனவிலங்கு தாக்கி உயிரிழந்திருக்கலாம் என காவல்துறை விசாரணை செய்தனர்.
ஆனால் திட்டமிட்டு கொலை நடந்திருப்பதாக தெரிவித்த உறவினர்கள், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என்றும் சந்தேக மரணம் என்றும் புகார் அளித்திருந்தனர்.
உறவினர்களின் புகாரை தொடர்ந்து, நான்கு தனிப்படை அமைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று விவசாயிகள் கொலை செய்யப்பட்டதாக கணேசன் என்பவர் ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
தொடர்ந்து பிரேத பரிசோதனை முதல் அறிக்கை கொடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்திய நிலையில், இன்று தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் இரண்டு விவசாயிகளின் உடல் பிரேத பரிசோதனை முதல் அறிக்கை கொடுக்கப்பட்டது.
அதில் மணி என்ற விவசாயி தலையில் தாக்கப்பட்டு தலை நசுங்கி இறந்திருப்பதும், கருப்பையா என்ற விவசாயி 16 இடங்களில் வெட்டு காயங்களுடன் கழுத்தறுக்கப்பட்டு இறந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
அதனை பெற்றுக்கொண்ட உறவினர்கள் இரண்டு விவசாயிகளின் உடல்களை 7 நாட்களுக்கு பிறகு இன்று வாங்கிக்கொண்டனர்.