Devan and Moses
Devan and Moses pt desk
தமிழ்நாடு

ஆவடி: கழிவுநீர் தொட்டியில் இறங்கிய இரு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

webteam

ஆவடியில் மத்திய அரசுயின் பாதுகாப்புத்துறை படை, உடை தொழிற்சாலை பணியாளர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு OCF ஒப்பந்த தூய்மை பணியாளர்களான, பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த மோசஸ், ஆவடி பஜார் தெருவைச் சேர்ந்த தேவன் ஆகிய இருவரும் முற்பட்டுள்ளனர்.

அப்போது மோசஸ் கழிவுநீர் தொட்டியில் இறங்கியபோது விஷவாயு தாக்கி தொட்டியினுள் மயங்கி விழுந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தேவன், மோசஸை காப்பாற்றுவதற்காக அவரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கியுள்ளார். அப்போது அவருக்கும் விஷவாயு தாக்கி மூச்சடைத்து தொட்டிக்குள் விழுந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக அருகிலிருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் தொட்டியினுள் கிடந்த இருவரையும் ஆபத்தான நிலையில் மீட்டனர். இதனைத்தொடர்ந்து அவசர ஊர்தி மூலமாக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் இருவரும் விளிம்பு நிலையில் உள்ள குடும்பம் என்பதால் தமிழக அரசு உரிய நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.