மின்சாரம் தாக்கி உயிரிழப்பு web
தமிழ்நாடு

நாமக்கல்| மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய கிராமம்

நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கி இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

நாமக்கல் மாவட்டம் வளையபட்டி அடுத்த ஆண்டாபுரத்தைச் சேர்ந்த செல்வம்(60) என்பவர் அப்பகுதியில் மணி என்பவரது விவசாய நிலத்தை குத்தகை எடுத்து பயிர் செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று செல்வம் அவரது மனைவி இளஞ்சியம்(50) மற்றும் பேரக்குழந்தைகள் சுஜித்(5), ஐவிழி(3) ஆகியோருடன் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது வயலில் சோளம் விதைப்பு செய்து அதற்கு நீர் பாய்ச்சும் பணியில் செல்வமும் அவரது மனைவியும் ஈடுபட்டிருந்தனர்.

2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு..

பேரக் குழந்தைகள் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர் திடீரென வயலை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை குழந்தைகள் தொட்ட போது மின்சாரம் தாக்கியதில் அவர்கள் அலறும் சத்தம் கேட்டுள்ளது.

இதனைக் கேட்ட பாட்டி இளஞ்சியம் உடனடியாக அந்த குழந்தைகளை காப்பாற்ற முயன்ற போது இளஞ்சியத்தின் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் 3 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மோகனூர் காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி  வைத்தனர். காவல் துறையின் முதற்கட்ட  விசாரணையில் மின் கம்பத்திலிருந்து மின் மோட்டார் இயக்கும் அறைக்கு செல்லும் மின்சார வயர் கம்பி வேலியில் மோதியதில் அதில் மின்கசிவு ஏற்பட்டு கம்பி வேலி முழுவதும் மின்சாரம் பரவி இருப்பதும், அதனை தொட்டதில் மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.