தமிழ்நாடு

பெரம்பலூர்: மைல்கல்லில் மோதி கார் கவிழ்ந்து விபத்து; ஐயப்ப பக்தர்கள் இருவர் உயிரிழப்பு

JustinDurai
பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சபரிமலை சென்று விட்டு திரும்பிய ஐயப்ப பக்தர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள கொளம்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த் (27), சூரியா (30), கணேசன் (35), ரமேஸ்(49) மதுராந்தகம் அருகே உள்ள சரவம்பாக்கத்தை சேர்ந்த செவமணி (28), லெட்சுமணண் (30) ஆகிய 6 பேர் ஐய்யப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலைக்கு டவேரா காரில் சென்றுள்ளனர். நேற்று காலை சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு திருச்சி வழியாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். காரை கணேசன் என்பவர் ஓட்டியுள்ளார். அவரே காரின் உரிமையாளர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலை டீ கடையோரம் நிறுத்திவிட்டு நேற்று நள்ளிரவு அனைவரும் தூங்கியுள்ளனர். அதிகாலையில் எழுந்து மீண்டும் காரில் சொந்த ஊருக்கு பயணித்துள்ளனர். அப்போது பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அயன்பேரையூர் பிரிவு அருகே சென்ற போது கார் அங்கிருந்த மைல் கல்லில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஆனந்த், சூர்யா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணித்த மற்ற நால்வரும் படுகாயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கார் ஓட்டுனர் கணேசன் கவலைக்கிடமாக உள்ளார். ஓட்டுனர் கண்ணயர்ந்ததாலேயே கார் மைல்கல்லில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.