தமிழ்நாடு

“கோயில் கோயிலாக சென்று பெற்ற குழந்தைகளை நோய் கொன்றுவிட்டது”- பக்கத்து வீட்டு பெண்கள் கண்ணீர்..!

“கோயில் கோயிலாக சென்று பெற்ற குழந்தைகளை நோய் கொன்றுவிட்டது”- பக்கத்து வீட்டு பெண்கள் கண்ணீர்..!

Rasus

கோயில் கோயிலாக சென்று வரம் வாங்கி பெற்ற குழந்தைகளின் உயிரை நோய் பறித்துவிட்டதாக கஜலட்சுமியின் பக்கத்து வீட்டு பெண்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

சென்னை மாதவரத்தை சேர்ந்த தம்பதியினர் கஜலட்சுமி- சந்தோஷ்குமார். இவர்களின் இரட்டை குழந்தைகள் தீக்சா, தக்சன். ஏழு வயதான இந்த இரட்டை இழந்தைகள் வீட்டின் அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டனர். காய்ச்சல் தீவிரமடைந்ததையடுத்து எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் இருவருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை வேக‌மாக குறைந்ததால் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகளை பறிகொடுத்துவிட்டு தற்போது நிற்கதியாக நிற்கின்றனர் கஜலட்சுமி- சந்தோஷ்குமார் தம்பதியினர்.

இந்நிலையில் கோயில் கோயிலாய் ஏறி தவமிருந்து வரமாய் பெற்ற குழந்தைகளை நோய் கொன்றுவிட்டதாக கஜலட்சுமியின் பக்கத்து வீட்டுக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “ கஜலட்சுமி- சந்தோஷ்குமார் தம்பதியினருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் அவர்கள் குழந்தை வரம் வேண்டி கோயில் கோயிலாக சென்றனர். சிகிச்சைக்காக மருத்துவமனைகளையும் தேடி தேடி அலைந்தனர். ஒரு வழியாக இறைவன் அருளாலும், மருத்துவத்தின் உதவியாலும் கஜலட்சுமி கர்ப்பமானார். அழகான இரட்டை குழந்தைகள் அவர்களுக்கு பிறந்தன. தீக்சா, தக்சன் என பெயரிட்டு அவர்களை பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்த்து வந்தனர். ஆனால் நோய் அவர்களின் உயிரை பறித்துவிட்டது. எங்களால் கூட அந்த குழந்தைகளின் இறப்பை ஜீரணிக்க முடியவில்லை. எப்படித்தான் அவங்கள் தாங்கிக் கொள்வார்களோ.? இந்த துயரத்தில் இருந்து அவர்கள் விரைவில் மீண்டு வர வேண்டும்” என தெரிவித்தனர்.

இதனிடையே காய்ச்சல்களை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதேபோல சென்னை உள்பட தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக காதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கூறியுள்ளார்.