தமிழக வெற்றிக் கழகம் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலின் மூலம் தனது முதல் தேர்தலை சந்திக்க விருக்கிறது. விழுப்புரம் மாவாட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் கொள்கை எதிரியாக பாஜகவையும் அரசியல் எதிரியாக திமுகவையும் அறிவித்திருந்தார் தவெக தலைவர் விஜய். இந்தநிலையில் தனது 2 ஆது மாநில மாநாட்டையும் மதுரையில் நடத்தி முடித்து, செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுதும் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் செல்லயிருக்கிறார் என அறிவித்து தமிழ்நாட்டு அரசியலை பரபரப்பாக்கியிருக்கிறார்கள் தவெகவினர்.
2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடவிருக்கும் விஜய் எந்த தொகுதியை தேர்ந்தெடுக்கபோகிறார் என்ற எதிர்பார்ப்பு தவெக தொண்டர்கள் உட்பட பொதுமக்கள் மத்தியிலும் இருந்துவருகிறது. இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று தவெக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் , திருச்சியில் பரப்புரை பயணத்தை தொடங்க உள்ளார் விஜய். இந்த நிலையில்தான் விஜய் தேர்தலில் முதல்முறையாக களமிறங்க உள்ள தொகுதி குறித்து, கட்சியினர் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். திருச்சி கிழக்கு, திருவாடானை, மதுரை மேற்கு ஆகிய தொகுதிகள் விஜயின் அபார வெற்றிக்கு சாதகமானவை என கணித்துள்ளனர். இவற்றில் திருச்சி கிழக்கில் போட்டியிட்டால், விஜயின் வெற்றி உறுதி என தவெகவினர் கருதுகின்றனர்.
இதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விஜய் முடிவு செய்துள்ளதாகவும், அங்குள்ள தவெக நிர்வாகிகளிடம் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 2021 தேர்தலில் திருச்சி கிழக்கில், திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். வரும் தேர்தலில் இந்தத் தொகுதியில், அமைச்சர் அன்பில் மகேஷ் போட்டியிட விரும்புவதாகவும் சொல்லப்பபடுகிறது.
விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவார் என தவெக வட்டாரங்கள் கூறிவரும் நிலையில் இந்த கருத்தையே நேர்படபேசு நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்ரமணியன் பேசியிருக்கிறார்.
பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்ரமணியன் கூறியதாவது, ” திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவார் என செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏனென்றால், திருச்சி கிழக்கு தொகுதி என்பது மிதமான நகர்புற பகுதி (Semi-Urban). இங்கு, சாதியின் அடிப்படையில் வாக்குகளிப்பது என்பது குறைவு. Semi-Urban பகுதி என்பதால் அந்த தொகுதியில் தேர்தல் பணிகள் செய்வதும் சுலபம். மேலும், அந்த தொகுதியில், மிகப்பெரிய தேவாலயம் ஒன்றும் இருக்கிறது. எனவே, கிறிஸ்துவ வாக்குகளையும் அறுவடை செய்யமுடியும் என நினைக்கிறார் விஜய்.
இதைத்தாண்டி பாலக்கரையில் இஸ்லாமிய மக்களின் வாக்குகள் அதிகம். காந்தி மார்க்கெட் மற்றும் மரக்கடை பகுதியை பரப்புரைக்கான பகுதியாக கேட்பதற்கான காரணமே அதுதான்” என்று கூறினார்.